இலங்கையில் மலைநாட்டை ஒட்டிய கித்துல்கல என்ற பிரதேசத்தில் உள்ள மழைக்காடுகளுக்கு குறுக்காக அமைக்கப்படும் பாலம் மற்றும் வீதியினால் அப்பகுதியின் உயிரியல் பல்வகைத் தன்மை அழிந்துபோகும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.பெருமளவிலான காடுகள் அழிக்கப்படுவதால் நீர் ஊற்றுக்கள் அழியக்கூடும் என்றும் அதனால் அப்பிரதேசத்துக்கே உரித்தான தாவரங்கள், பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் ஒழிந்துவிடும் அபாயம் ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் முறைப்பாடு செய்திருக்கிறது.குறித்த பகுதியில் போக்குவரத்துக்குத் தேவையான சிறந்த வீதிகள் ஏற்கனவே இருக்கின்றபோது, பிரதேச மக்களுக்கு தேவைப்படாத வீதியொன்றை சுமார் 170 லட்சம் ரூபா செலவில் அரசாங்கம் அங்கு அமைத்துவருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.அரசியல்வாதிகளின் தேவை?
மாகந்தாவ காடுகளிலிருந்து மரங்கள் கடத்தப்படும் அபாயம் உள்ளது
பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் சொந்தத் தேவைகளுக்காகவே முக்கிய மழைக்காடுகளுக்கு நடுவே இந்த வீதி அமைக்கப்படுவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.இந்த வீதி அமைக்கப்படுவதன் மூலம் மழைக்காடுகளிலிருந்து மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படக்கூடிய ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான எஸ்.விஸ்வலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கித்துல்கல, மாகந்தாவ காட்டுப்பகுதி உலகில் காண்பதற்கரிய முக்கிய உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களுக்கு இருப்பிடமாக இருக்கிறது.
உலகில் வேறெங்கும் காணப்படாத மீன் இனமொன்று இந்தக் காடுகளிலுள்ள நீர்நிலைகளிலிருந்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டும் விஸ்வலிங்கம், அந்தப் பகுதி அழிந்துபோவதை தடுப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை பிபிசியிடம் மறுத்த இலங்கை அரசாங்கத்தின் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் இயக்குநர் ஹிட்டிசேகர, பிரதேச மக்களின் தேவைக்காகவே வீதி அமைக்கப்படுவதாகக் கூறினார்.
அரசியல்வாதிகளின் தேவை அந்த வீதி அமைப்பில் இருப்பதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
மலர்விழி
கொழும்பு