கிங்ஸ்டன் : கெய்லின் அதிரடி சதத்தாலும், சாமுவேல்சின் பொறுப்பான சதத்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி மகத்தான வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. 12 மாதங்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த வெஸ்ட் இண்டீசின் அதிரடி மன்னன் கெய்ல் இம்முறையும் தனது விளாசலை வெளிப்படுத்தினார். ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக 2 டி20, முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த இவர் இம்முறையும் புயல் வேகத்தில் ரன் சேர்த்தார். ஒருமுனையில் இவர் சிக்சர் மழை பொழிய மறுமுனையில் சாமுவேல்ஸ் நல்ல ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடியை பிரிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ போராடியும் அவர்களால் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
கெய்ல் 107 பந்தில் 9 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 125 ரன் குவித்து ஆட்டமிழந்தார். சாமுவேல்ஸ் 103 பந்தில் 101 ரன் எடுத்தார். இருவரது பொறுப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வெற்றிக்காக போராடினர். குப்தில் (51), வில்லியம்சன் (58), வாட்லிங் (72*) ஆகியோர் அரைசதம் அடித்த போதிலும், வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை. மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் நியூசிலாந்து அணி 47 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது. 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2,0 என்ற முன்னிலை வகிக்கிறது.