சென்னை, : எஸ்.எஸ்.மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் படம் ‘அர்ஜுனன் காதலி’. ஜெய், பூர்ணா ஜோடி. படத்தை இயக்கும் பார்த்தி பாஸ்கர் கூறியதாவது:
படத்தின் தலைப்பை பார்த்து விட்டு இது புராண கதையா என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை. இது முற்றிலும் இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த காதல் கதை. சிலரின் பெயரால் சிலர் அடையாளம் கணப்படுவதைப்போல படத்தின் நாயகி அர்ஜுனன் காதலி என்று அறியப்படுகிறாள். அதனால் இந்தப் பெயர். ஒரு மாணவனுக்கும் குறிப்பிட்ட மாணவிக்கும் எப்படி காதல் உருவாகிறது? உருவான பிறகு அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள், பெற்றவர்களிடம் இருந்து விலகி அவர்கள் நெருங்குவது எப்படி என்பதை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் முயற்சி. பொதுவாக இடி இடிக்கும்போது, ‘அர்ஜுனா…அர்ஜுனா’ என்பார்கள். அப்படி சொல்லும் வழக்கமுடைய ஹீரோயின், அர்ஜுனா என்ற பெயர் கொண்ட ஹீரோ. இருவருக்கும் காதல் வருவதற்கு இடி முக்கிய காரணமாக இருக்கும். இதனால் படத்தின் பல காட்சிகளில் இடி, மழை இருக்கும்.
