வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கான மகப்பேற்று சத்திர சிகிச்சை கூடம் மற்றும் தேசிய இரத்த சேவைக்கான இரத்த வங்கி ஆகியன இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
வாழைச்சேனை, வாகரை, வாகனேரி, பணிச்சன்கேனி, மாங்கேணி, ஆளங்குளம், போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதுவரை காலமும் மகப்பேற்று சத்திர சிகிச்சை நடவடிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே செல்ல வேண்டி இருந்ததாகவும் வாழைச்சேனையில் மகப்பேற்று சத்திர சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டதன் மூலம் கஸ்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இப்பகுதி மக்கள் தமது வைத்திய நடவடிக்கைகளை இலகுவாகவும் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எஸ்.தட்சணாமூர்த்தி தெரிவித்தார்.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.எஸ்.சதுர்முகம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.ஏ.சீ.எம்.ரஹ்மான் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர்.எஸ்.சரவணன் மயக்க மருந்தூட்டல் நிபுணர் டாக்டர்.எஸ்.மதநாளகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.