தம்பா : ஜூலை 08ம் தேதியன்று நியூ தம்பா நூலகத்தில் தம்பா தமிழ் சங்கம் சார்பாக “பண்டை கால தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்” என்ற தலைப்பில் முனைவர் அ.பிச்சை சொற்பொழிவு ஆற்றினர். உடல் நலம், நோய்கள், சுகாதாரம், உடற்பயிற்சி, ஊன் பெருக்காமை, தூக்கமின்மை, சினம், ஆயுள் வேதம் மற்றும் உணவே மருந்து என்ற பல மருத்துவ ரீதியான கருத்துகளை பழங்கால பதினெண் கீழ்கணக்கு தமிழ் இலக்கியத்திலும், செய்யுள், வெண்பா அறநூல்கள் மற்றும் திருக்குறள் வாயிலாகவும் நம் தமிழ் அறிஞர்கள் மற்றும் புலவர்கள் எவ்வாறு படைத்துள்ளனர் என்பதை மிக விளக்கமாக, அறுசுவை தமிழிலே நகைச்சுவையுடன் எல்லோருக்கும் புரியும் படியாக எடுத்து கூறினார். உள்ளத்தில் சீர்மையும், அமைதியும், சமதன்மையும் குறையும் போது அவை உடலை பாதிப்பு உள்ளாக்குகின்றன. வருமுன் காப்பவன் தான் அறிவாளி என்ற முறையில் உள்ளமெனும் பெருங்கோவிலை நன்றாக நிர்வாகித்து கொண்டால் உடலில் சக்தி தங்கும் என்பதை நேரடியாக உணர்த்தினார். தம்பா தமிழ் சங்கம் சார்பாக மருத்துவர். ராஜசேகர் நினைவு பரிசினை முனைவர் அ. பிச்சைக்கு வழங்கினார். இந்த சொற்பொழிவை கேட்க வந்த அனைத்து தம்பா தமிழ் உள்ளங்களுக்கும் தம்பா தமிழ் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
