நியூசிலாந்து : நியூசிலாந்தின் ஆக்லாந்து மாநகரில் வாழும் தமிழர்களுக்கு ஒரு திருவிழாவாக மே 5ம் தேதி முத்தமிழ் சங்கம் நடத்திய 10 வது ஆண்டு விழா கொண்டாட்டம் அமைந்தது. முத்தமிழ் சங்கத்தின் தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நியூசிலாந்து நாட்டின் தேசிய கீதத்துடன் ஆரம்பமான நிகழ்ச்சி, குழந்தைகளின் நாட்டிய நாடகம், திரை இசை நடனம், பாடல் மற்றும் தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் விதமாக கரகாட்டம், பொய்க்கால் குதிரை, குறவன் குறத்தி நடனம், மயிலாட்டம் என முதன் முறையாக மேடையேறிய குழந்தைகளின் நடனம், கொங்கனி இசைக்கான நடனம் மற்றும் புவனா வெங்கட் குழுவினர் வழங்கிய பரத நாட்டியதுடன் நடனத் தமிழ் அரங்கம் முடிவுற்றது.
தேனீர் இடைவேளைக்குப் பிறகு இசைத்தமிழ் அரங்கம், சுமார் 2 மணி நேரம் இசை அமுதினை திகட்டாமல் அள்ளி வழங்கினார் ஏ.கே.சி.நடராஜன். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ரசிகர்களின் கைத்தட்டல் சிகரத்தை தொட்டதுடன், கடைசி பாடலின் போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் முத்தமிழ் சங்கம், நடராஜனுக்கு “ துளை இசைக்குரிசில்” என்ற பட்டத்தினை வழங்கி கௌரவப்படுத்தியது. நியூசிலாந்து கலை இலக்கிய வட்டத்தினர் அவரின் முழு உருவத்தினை வரைந்து பரிசாக வழங்கினர். நிகழ்ச்சியில் நியூசிலாந்து நாட்டின் கலாச்சாரத்துறை பிரதிநிதியான மிலிஸா லீ எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, 10 வது ஆண்டு விழா மலரினையும் வெளியிட்டார். பிறகு முத்தமிழ் சங்கத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக பொருள் உதவி வழங்கியவர்கள், தொண்டு புரிந்த தன்னார்வலர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் சங்க நிர்வாகிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மிகவும் சிறப்பாக சைவ, அசைவ இரவு உணவினை வழங்கி மேலும் மெருகேற்றினர் சாஃப்ரான் உணவகத்தார்.
