மெல்பேர்ண் : ஆஸ்திரேலியாவில் 12 வது எழுத்தாளர் விழா மே 13ம் தேதி மெல்பேர்ண் திருவள்ளுவர் அரங்கில், ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கிய விழா இரவு 9.30 வரை தொடர்ந்து நடைபெற்றது. இடையே பார்வையாளர்களுக்குச் சிற்றுண்டியும், விழா முடிவில் இரவு உணவும் வழங்கப்பட்டன. ஓவியர் ஞானம், சிசு நாகேந்திரம், கவிஞர் இளமுருகனார் பாரதி, எழுத்தாளர் மாத்தளை சோமு, தமிழறிஞர் நந்தகுமார் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைக்க விழா இனிதே ஆரம்பமானது. சாகித்தியா வேந்தன், அபிதாரினி சந்திரன், சமுத்திராஸ்ரீ பத்மஸ்ரீ, ஆரூரன் மதியழகன் ஆகிய மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினை மிகவும் இனிமையாகப் பாடினார்கள். தொடர்ந்து மோசிகா பிரேமதாச மற்றும் ஸ்ரீசேகா பிரேமதாச சகோதரிகளின் இசைப்பாடல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சிறுவர் அரங்கு இடம்பெற்றது. “அனுபவப்பகிர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தச் சிறுவர் அரங்கில் தீர்ப்பாளராக காவியா வேந்தனும், தமது அனுபவங்களை எடுத்துரைப்போராக நித்தியா பத்மஸ்ரீ, துவாரகன் சந்திரன், ஆரபி மதியழகன், காவியன் பத்மஸ்ரீ, மோசிகா பிரேமதாச ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
சிறுவர் அரங்கினைத் தொடர்ந்து இடம்பெற்ற மாணவர் அரங்கில் சிட்னியில் இருந்து வருகை தந்திருந்தவர்களும், மெல்பேர்ணில் வசிப்பவர்களுமாக 12 மாணவிகளும், ஒரு மாணவனும் பங்குபெற்றுச் சிறப்பித்தார்கள். “கற்றதும் பெற்றதும்” என்ற தலைப்பில், பிரபல பேச்சாளர் நந்தகுமார் தலைமையில் இந்த மாணவர் அரங்கம் நடைபெற்றது. பின்னர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் சு.ஸ்ரீகந்தராசா தலைமை உரையாற்றினார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிய அவர் சங்கத்தின் செயற்பாடுகளைப் பற்றியும், இன்றைய காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டியதன் அவசியம் பற்றியும் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற சிறுவர்களுக்கும் மாணவர்களுக்கும் அன்பளிப்பாக நூற்பொதிகள் வழங்கப்பட்டன. பின்னர் கவிஞர் வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி முன்னிலையில் கவியரங்கமும் , பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமு தலைமையில் கருத்தரங்கமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழில் சிறுகதை, கவிதை, நாவல், வானொலி, தொலைக்காட்சி, இதழ்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள் என்ற தனித்தனித் தலைப்பக்களில் ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களைச் சமர்ப்பித்தனர். அடுத்ததாக நூல் வெளியீட்டரங்கு இடம்பெற்றது. சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் நடைபெற்ற இவ்வரங்கில் மூன்று நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு வைக்கப்பட்டன. பிரபல நூல் ஆய்வாளர் க.சிவசம்பு அறிமுகவுரையை நிகழ்த்தினார். நூலாசிரியர் நா.மகேசன் ஏற்புரையாற்றினார். எழுத்தாளர் விழாவின் இறுதி நிகழ்ச்சியான கலையரங்கில் இரண்டு நடனங்களும், ஒரு நாடகமும இடம்பெற்றன. தொடர்ந்து சிட்னி சோலைக்குயில் அவைக்காற்று கலைக்கழகம் வழங்கிய “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்ற மஹாகவியின் பாநாடகம் இடம் பெற்றது. விழா நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளர்களாக நவரெத்தினம் அல்லமதேவனும், நித்தியதாரிணி ஆனந்தகுமாரும் சிறப்பாகப் பணியாற்றினார்கள். ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயலாளர் மாலதி முருகபூபதியின் நன்றியுரை நிகழ்த்தினார்.
