இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள கிரிக்கெட் நட்புறவை மேலும் வளர்த்துக் கொள்ளும் விதமாக, இந்தியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒப்புக் கொண்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 2007ம் ஆண்டுக்குப் பிறகு குறுகிய கால கிரிக்கெட் போட்டிக்கு ஒப்புக் கொண்டு பாகிஸ்தான் அணி இந்தியா வருவது இதுவே முதல் முறை.
ஏனெனில், இங்கிலாந்து அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 4 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு 20க்கு 20 போட்டிகளிலும் இந்திய அணியுடன் விளையாட ஒப்புக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கிறிஸ்மஸ் விடுமுறைக்காக டிசம்பர் 22ம் திகதி முதல் ஜனவரி 3ம் திகதி வரை அவர்கள் திரும்பிச் செல்கின்றனர். இதனால் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11ம் திகதிக்கு முன் நடைபெறாது என்று கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட குறுகிய கால இடைவெளியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்திய மோதும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இப்போட்டிகளை மொகாலி, டில்லி, தர்மசாலா ஆகிய இடங்களில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.