பாகிஸ்தானிலுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிய திறமை வேட்டை (ரலன்ற் ஹன்ற்) நிகழ்ச்சியை நடத்தப் போவதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெயர் பெற்றது பாகிஸ்தான். பாகிஸ்தானிலிருந்து பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளனர். ஆனால் தற்போது பாகிஸ்தானில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் வருகை குறைந்து வருகிறது.
இதனால் பாகிஸ்தானில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிந்து எதிர்கால பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பலப்படுத்தும் வகையில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் ஒரு போட்டியை நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
சர்வதேச அளவில் பாகிஸ்தானில் தான் சிறந்த வீரர்கள் இருப்பதாக மற்ற நாட்டு கிரிக்கெட் சபைகள் கூறுகின்றன. ஆனால் பாகிஸ்தான் அணியில் நீண்ட காலமாக ஒரு திறமையான வேகப்பந்து வீச்சாளரை நான் காணவில்லை. பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்களின் நடவடிக்கைகளில் குறை இருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் மூலம் அவமானப்படுத்தப்படுகின்றனர். பாகிஸ்தான் வீரர்களுக்கு நடக்கும் இது போன்ற சம்பவங்களை காணும் வளர்ந்து வரும் இளம்வீரர்கள் பின்வாங்கி விடுகின்றனர்.
இதையடுத்து நான் பாகிஸ்தானில் உள்ள புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்று சிறந்த வீரர்களைச் சந்தித்து அவர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளேன். ஊடகங்கள் மற்றும் பல வழிகளைப் பயன்படுத்தி இளம் வீரர்களை வெளி உலகிற்கு காட்டவுள்ளேன்.
வேகப்பந்து வீச்சாளரின் பணி என்பது ஒரு எளிமையான பணி அல்ல. அது ஒரு கடினமான பணி. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்களின் மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் கடும் சட்டங்களை நீக்க வேண்டுமென்றார்.
