இம்மாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர், ருவென்ரி ருவென்ரி உலகக் கிண்ண தொடருக்கு நல்ல பயிற்சியாக அமையும் என இந்திய அணி வீரர் ரோகித் சர்மா தெரிவித்திருக்கின்றார்.
மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்ற இந்திய “ஏ” அணி, 3 டெஸ்ட் போட்டி மற்றும் 50 ஓவர் போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதில் பங்குபற்றிய ரோகித் சர்மா சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போட்டிகளில் ரோகித் சர்மா, ஒரு இன்னிங்சில் மட்டும் அதிகபட்சமாக 94 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த 5 இன்னிங்சில் 51 ஓட்டங்கள் மட்டும் எடுத்து, அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் 6வது இடம் பெற்றார். அத்துடன் பந்துவீச்சில் 76 ஓவர்கள் பந்து வீசி, 9 விக்கெட் வீழ்த்தி, இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம் பெற்றார்.
இது குறித்து ரோகித் சர்மா தெரிவிக்கையில்,
மேற்கிந்திய தீவுகள் தொடரில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இது எனக்கு மோசமான தொடர் அல்ல.
அதேநேரம், அணியின் தோல்விக்கு, அங்குள்ள ஆடுகளங்கள், போட்டி அட்டவணை போன்றவற்றை குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஒட்டுமொத்த அளவில், அணியாக இணைந்து, சிறப்பாக செயல்பட தவறியதே தோல்விக்கு காரணம்.
என்னைப் பொறுத்தவரை பந்துவீச்சில் விக்கெட்டுகள் எடுத்தது மகிழ்ச்சி. இம்மாதம் நடைபெறவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், எனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.
இத்தொடர் ருவென்ரி ருவென்ரி உலகக் கிண்ண தொடருக்கு பயிற்சியாக சிறிலங்காத் தொடர் அமையும் என்பதால், இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் எனவும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
Kirush Shoban