குடும்பத்தினருடன் தற்போது நேரத்தை செலவிட விரும்பியதாலேயே சிறிலங்காத் தொடரில் பங்குபற்றவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்வை தான் மறக்கவில்லை எனவும் கிரிக்கெட்டை பைத்தியமாக காதலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் இம்மாதம் இடம்பெறவுள்ள தொடரில் பங்கேற்கமை குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே சச்சின் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிரிக்கெட்டிற்கு மனதில் ஆழமான அடித்தளம் அமைக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த ஆட்டம் வெளிப்படும். அதிகப்படியான ஆட்டங்களில் விளையாடும் போதுதான் ஆட்டத்தின் நுணுக்கங்களை மேலும் மேலும் அறிய முடியும். என அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருடன் தற்போது நேரத்தை செலவிட விரும்பியதாலேயே இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளேன். இப்போது எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டுள்ளேன். அடுத்த 10 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விளையாடுவேன்.

நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். முக்கியமான பிரச்னைகள் குறித்து எப்படி பேசுவேன் என கேள்வி எழுப்புகிறார்கள். ஒரே நாளில் எல்லாவற்றையும் தீர்த்துவிட முடியாது.

எனது குழந்தைகள் மீது நான் எப்போதுமே எனது விருப்பத்தை திணித்தது கிடையாது. மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறான். மகள் சாரா மருத்துவ துறையில் விருப்பமாக உள்ளார். ஒரு தந்தையாக அவர்களை ஊக்கப்படுத்தவும், ஆர்வப்படுத்தவும் செய்கிறேன். என்றார்.

Kirush Shoban

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *