நாய்களுடன் பழகும் குழந்தைகளுக்கு நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி முடிவு. வீட்டில் பாதுகாப்பு பொழுதுபோக்கு மற்றும் நட்புக்காக செல்லப் பிராணிகள் வளர்ப்பது வழக்கம். இதில் நன்றியுடன் பழகும் நாய்களை அதிகம் பேர் விரும்புவார்கள். எஜமானரின் கட்டளைக்கு கீழ்ப்படிவது இதன் ஸ்பெஷாலிட்டி.
இந்நிலையில் நாய்களுடன் அதிக நேரம் செலவிடும் சுமார் 400 குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பாக பின்லாந்தின் கூபியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
குழந்தைகள உள்ள வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குழந்தைகள் செல்லப் பிராணிகளுடன் தினமும் சிறிது நேரம் செலவிட்டால் அவர்களுக்கு காது பாதிப்புகள் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இதனால் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோயற்ற வாழ்க்கை சாத்தியமாகும். குறிப்பாக,குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் செல்லப் பிராணிகளுடன் கூடுதல் நேரம் செலவிடுவது அதிக பலனை அளிக்கும். பூனையுடன் பழகுவதாலும் இத்தகைய நன்மைகள் கிடைக்கிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் பூனையை விட நாய்தான் பெட்டர்.
செல்லப் பிராணிகள் இல்லாத வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளுடன் பழகும் குழந்தைகளுக்கு நோய்த்தாக்குதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.