பெயர் வந்தவிதம்
இயல்பாக தோன்றிய ஒன்றிற்கு ஆரம்ப கால வரலாறு அறிவது கடினம். இந்துப் பெரியோர்களைக் கேட்டால் மனிதகுலம் தோன்றிய போதிலிருந்து இருந்து வருவதாக கூறுவார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் இந்து மதம் கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார்கள். ஆனால் இதைத் தவறென்று நிரூபிக்க கிறிஸ்துவுக்கு 5000 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள், சிலைகள் ஏராளமாக இந்தியாவில் இருக்கின்றன.
பழங்காலத்தில் பூமியில் இருந்த மதங்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து உலகிலுள்ள பெரிய மதங்களில் ஒன்றாக இருப்பது இந்து மதம் மட்டுமே. மற்றப் பெரிய மதங்களான புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை கடந்த சுமார் 2500 வருடங்களில் தோன்றியவை. இதில் புத்த மதம் நேரடியாக இந்து மதத்திலிருந்து தோன்றியது.
கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை தோன்றிய போது அந்த இடங்களில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த மதங்கள் அவற்றை எதிர்க்க முயன்று அழிந்து போயின. இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. மேலும் மற்ற மதங்கள் வெளியிலிருந்து புகும் போதும், அவற்றைப் புகுத்திய அரசர்கள் வலுக்கட்டாயமாக திணிக்காதவரை, இந்து மதம் அதை எதிர்த்ததில்லை. மாறாக இருபுறமும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே நிகழ்ந்தது.
எண்ணற்றக் கடவுள்கள், சிலை வழிபாடுகள், இயற்கை வழிபாடுகள் எல்லாம் இந்து மதத்தில் உண்டு. உருவமற்ற எங்கும் நிறைந்த கடவுள் தத்துவமும் மிகச் சிறந்த விளக்கங்களுடன் இதில் உண்டு. ஒன்றுக்கொன்று எதிர் மறையான கருத்துகள் இதில் ஏராளம். இவை குழப்பம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இவற்றில் ஈடுபடும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த எதிர்மறைகளில் இருந்து நேரடி இறையுணர்விற்கு இவை சிந்திக்கும் மனிதனை தூண்டிவிடுகின்றன.