ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?
காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது.(அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடம் என அறியாதவர்கள்..) அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள். (காரணம் அது பெண்மையின் சிறப்பம்சமாம்….)
`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று காதலி கேட்டால், அங்கு ஓர் பூகம்பம் வெடிக்கப்போவதாகக் கருதலாம்.அல்லது காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.
எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக தெரிவிக்கவே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி ஊகித்துக் கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.
இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.
மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.
மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.
ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.
பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.
அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதிகாரி ஆணாக இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும்போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின் மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர் களாகத் தெரிகிறார்கள்.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *