இது காதல்
அவன் இனியன்.
கணிப்பொறிகளோடு
கண்விழித்து யுத்தம் செய்பவன்.
இரவு பகல் பாராது 
மென்பொருளோடு முத்தம் செய்பவன்.
அவள்
சுடர்விழி
பெயரில் மட்டுமல்ல
விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள்.

 
மலையில் பறந்து திரியும் ஒரு
நந்தவனம்
சிரிப்பில்
பேச்சில்
சிணுங்கலில்
கவிதைகளுக்கு விளக்கம் சொல்பவள் !
கண்டதும் காதல் என்பதில்
அவனுக்கு உடன்பாடில்லை
விழிகள் காண்பவை உடலை மட்டுமே
கண்டவுடன் மோகம் முளைவிடலாம்
காதல் கிளைவிடாது என்று தர்க்கம் செய்பவன்.
கண்டான்.
அவளை கண்டவுடன்
காதல் பிறந்துவிடவில்லை..
அல்லது
கண்டவுடன் பிறந்ததை
காதல் என்று அவன் கற்பித்துக் கொள்ளவில்லை
கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
அவளைக் கண்டவுடன்
அவனுக்குக் கைகூடியது.
மனம் ஏனோ சிறகொடிந்த சிட்டுக்குருவியாய்
அவள் நினைவுகளில்
விழுந்து கிடந்தது.
அவளோடு நட்புச் சுவர்கட்ட
அதுவே அவனுக்கு 
சீனப் பெருச்சுவராய்
இருக்கும் என்று
அவன் நினைக்கவில்லை 
பேசினான்.
பேசினாள்.
காதலுக்கும் இசைக்கும் மட்டும்
மொழி ஒரு முட்டுக் கட்டையல்ல.
ரசிக்கும் மனசு போதும்.
அவளுடைய வார்த்தைகளில்
இவன் மனசுக் கூட்டுக்குள்
பச்சைக் கிளிகள்
சிகப்பு அலகுகளால்
அழகியல் பயின்றன !!!

                                                          பார்த்தியின் பதிவு தொடரும்…..

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *