பிபிசிக்கு இந்த ஆண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று நேற்றல்ல, நமக்கு என்றுமே செய்தி என்றவுடன் நினைவுக்கு வரும் ஓர் ஊடகம் என்றால், அது பிபிசி மட்டுமே. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒரு காலத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள பிபிசி உலகச் சேவையின் செய்திகளையே செவிமடுக்கும்.
பிபிசியின் நம்பகத்தன்மைக்குக் காரணம் அவர்களின் செய்தி வழங்கும் உத்தி எனலாம். மற்ற ஊடகங்களில் இருந்து பிபிசி முற்றிலும் மாறுபட இதுவே காரணமாகிறது. உலகின் முன்னணி வானொலிகளான “வாய்ஸ் ஆப் அமெரிக்கா’, “வாய்ஸ் ஆப் ரஷ்யா’ மற்றும் “வாய்ஸ் ஆப் ஜெர்மனி’ ஆகிய வானொலிகள் சம பலத்துடன் ஒலிபரப்பி வந்தாலும், பிபிசியின் தனித்துவத்திற்குக் காரணம் அதன் சுதந்திரம்.
மத்திய லண்டனில் கிங்ஸ்வே பகுதியில் அமைந்துள்ள புஷ் ஹவுஸில் இருந்து இதுநாள் வரையில் சேவை செய்துவந்த பிபிசி உலகச் சேவை தனது 80-வது ஆண்டின் போது மீண்டும் தனது பழைய இடமான பிராட்காஸ்டிங் ஹவுஸிற்குச் செல்கிறது.
இடம்தான் பழையதே தவிர, அங்கு அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் அனைத்தும் புதுமையானவை. பிராட்காஸ்டிங் ஹவுஸில் இருந்து பிபிசி வெளியேறியமைக்குக் காரணம் ஒரு குண்டுவெடிப்பு.
இன்றைய பிராட்காஸ்டிங் ஹவுஸýக்கு வெளியே 1940 டிசம்பரில் ஜெர்மன் நிலக்கண்ணி வெடித்து பெரும் தீ மூண்டது. பல மணிநேரம் தீ எரிந்ததால் கட்டடம் மிகவும் சேதமடைந்தது. இதனால் 1941-இல் புகழ்பெற்ற புஷ் ஹவுஸýக்கு மாற்றம் அடைந்தது.
அன்று முதல் பிபிசி உலகச் சேவையானது புஷ் ஹவுஸில் செயல்படத் தொடங்கியது. இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயம் யாதெனில், புஷ் ஹவுஸ் பிபிசிக்குச் சொந்தமான கட்டடம் அல்ல. அது ஜப்பானிய நிறுவனமான கடொ கஹாகுவுக்குச் சொந்தமானது ஆகும். இதுநாள் வரை இந்தக் கட்டடத்தை பிபிசி குத்தகைக்கு எடுத்து ஒலிபரப்பிற்குப் பயன்படுத்தி வந்தது.
புஷ் ஹவுஸினை வடிவமைத்தவர் அமெரிக்கரான ஹார்வி வைலி ஹொர்பெட். 4 ஜூலை 1925-இல் திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடம் முதலில் முக்கிய வர்த்தக மையமாகவே செயல்பட்டது. போர்ட் லேண்ட் கல்லினால் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் 1929-இல் உலகின் மிக அதிக மதிப்புள்ள கட்டடமாக அறிவிக்கப்பட்டது.
அன்றைய மதிப்பில் ஒரு கோடி அமெரிக்க டாலராக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிபிசி உலகச் சேவையானது 1932 டிசம்பரில் சாம்ராஜ்ய சேவையாகத் தலைமை இயக்குநர் ஜான் ரீத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சிற்றலையை ஒரு முக்கிய ஊடகமாக அனைத்து சர்வதேச வானொலிகளும் பயன்படுத்தி வந்தன. அதற்குக் காரணம் சிற்றலை ஒலிபரப்பின் மூலம் தொலைதூர நாடுகளையும் சென்றடையலாம்.
குறிப்பாக, இன்றும் நமது இந்திய அரசு தனியார் வானொலிகளில் செய்திகள் ஒலிபரப்பத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பல வானொலிகள் வெளிநாடுகளில் உள்ள சிற்றலை வரிசைகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குச் செய்திகளை ஒலிபரப்பி வருகின்றது.
குறிப்பாக, பிபிசி தமிழோசை மற்றும் வெரித்தாஸ் வானொலிகள் வெளிநாடுகளில் உள்ள சிற்றலை ஒலிபரப்பிகளைப் பயன்படுத்தியே தமிழக நேயர்களுக்கான வானொலி சேவையைச் செய்து வருகின்றன. இதுபோன்று இன்னும் பல வெளிநாட்டு வானொலிகள் தமிழில் இன்றும் சிற்றலை சேவையைச் செய்து வருகின்றன.
தொடக்ககால ஒலிபரப்பு சிறப்பாகவோ சுவாரஸ்யமாகவோ இருக்காது எனத் தலைமை இயக்குநர் ஜான் ரீத் தனது உரையில் கூறினாலும், பிற்காலத்தில் பிபிசி உலகச் சேவை மிகவும் புகழ்பெற்றது. ஒரே சமயத்தில் உலகின் அனைத்து கண்டங்களுக்கும் தனது சிற்றலை சேவையைச் செய்தது.
உலகச் சேவையின் ஒலிபரப்பு தொடங்கப்பட்டு ஆறு நாள்களில் புகழ்பெற்ற எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங்களால் எழுதப்பட்ட கிறிஸ்துமஸ் செய்தியை ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் உலகச் சேவை நேயர்களுக்கு வாசித்தார். அதில் அவர் “”நான் எனது இல்லத்தில் இருந்து மட்டுமல்ல, உள்ளதில் இருந்தும் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.
உலகம் முழுவதும் உள்ள பிபிசியின் நேயர்கள் அரசரின் குரலை மிகத்தெளிவாகக் கேட்டது வரலாற்றினில் பதிவானது.
போர் காலகட்டங்களில் பிபிசியின் சேவை மகத்தானது. குறிப்பாக 1940-இல் நடந்த சம்பவம் இதற்கு ஒரு நல்ல சான்று எனலாம். ஜெர்மன் படைகள் பிரான்ûஸத் தாக்கியது. இதனால் பிரான்ஸ் ஜெர்மனியிடம் சரணடைந்தது. அப்போது பிரான்ûஸ விட்டு வெளியேறிய பிரெஞ்சு ராணுவத் தளபதி சார்ல் த கோல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார். அதை அடுத்து நான்கு வருடங்களும் பிரெஞ்சு மக்களுக்கு பிபிசி உலக சேவையின் ஊடாகவே அவர் உரையாற்றினார். ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் ஒலிபரப்பான இந்த உரை பிரெஞ்சு மக்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைத் தந்தது.
இரண்டாம் உலகப் போர் பிபிசியிலும் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பிபிசி சாம்ராஜ்ய சேவை, 1939 நவம்பரில் பிபிசி கடல்கடந்த சேவை எனப் பெயர் மாறியது. பிற்பாடு உலகச் சேவையானது தனிக்கதை. முதல் வெளிநாட்டுச் சேவையாக அரபிக் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் தென் அமெரிக்காவுக்கான ஸ்பானிய மொழி சேவை, ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு, ஆப்பிரிக்கன், போர்த்துகீஸ் ஆகிய மொழி ஒலிபரப்புகள் தொடங்கப்பட்டன.
1940 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிபிசியானது 34 மொழிகளில் ஒலிபரப்பத் தொடங்கியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் வாய்ஸ் ஆப் ரஷ்யா வானொலியை அடுத்து அதிக மொழிகளில் ஒலிபரப்பும் வானொலியாக பிபிசி கடல்கடந்த சேவை இருந்தது எனலாம்.
ஒவ்வொரு நாளும் 78 செய்தி அறிக்கைகள் 2,50,000 வார்தைகளுக்கு மிகாமல் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. இதே காலகட்டத்தில் இந்தியாவிற்கான சேவை ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டு இன்று வரை அது ஒலிபரப்பாகி வருகிறது. மேலும் ஐஸ்லாண்டிக், அல்பேனியன், பர்மீஸ் ஆகிய மொழிகளிலும் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இதே காலகட்டதில் பிபிசி தமிழ் மொழியிலும் தனது சேவையை (3 மே 1941) தொடங்கியது. அன்று தொடங்கப்பட்ட சேவை இன்று வரை சிற்றலையில் தொய்வில்லாமல் தொடர்கிறது.
தேம்ஸ் நதிக் கரையிருந்து தேடிவரும் ஓசை, தேன் தமிழில் செய்திபல பாடிவரும் ஓசையான தமிழோசை முதலில் “செய்தி மடல்’ என்ற பெயரிலேயே ஒலிபரப்பாகி வந்தது. தொடக்க காலத்தில் மூன்று நாள்கள் மட்டுமே ஒலிபரப்பப்பட்டது.
தமிழோசை தொடங்கப்பட்ட வரலாறே சுவாரஸ்யமானது. இரண்டாம் உலகப் போரின் போது தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பிரிட்டிஷ் படைகளில் போர் வீரர்களாகப் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கான உள்ளூர் செய்திகளைக் கொண்டு செல்வதற்காகவே முதலில் தமிழ் சேவை தொடங்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் தமிழோசையானது.
நேரடி ஒலிபரப்பு செய்த முதல் வெளிநாட்டு தமிழ் வானொலி என்ற பெருமையும் தமிழோசைக்கு உண்டு. 1983-இல் செயற்கைக்கோள் மூலம் இந்த நேரடி சேவைத் தொடங்கப்பட்டது. 1991-இல் தனது பொன்விழாவை தமிழோசை கொண்டாடியது.
இதன் மூலம், பொன்விழா கொண்டாடிய முதல் வெளிநாட்டு தமிழ் வானொலி என்ற பெருமையும் பிபிசி தமிழோசை பெற்றது. இந்த ஆண்டு முதல் வாரத்தின் அனைத்து நாள்களும் தனது சேவையைச் செய்யத் தொடங்கியது தமிழோசை.
பிபிசி உலகச் சேவை தொடங்கப்பட்ட அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழோசையும் தொடங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று 72 ஆண்டுகளைக் கடந்தும் தமிழோசையானது சிற்றலை மட்டுமல்லாமல் இணையம், கைப்பேசி என அனைத்து ஊடகங்களின் வழியாகவும் தனது சேவையைத் தொய்வின்றி செய்து வருகிறது.
சிற்றலை வானொலிப் பெட்டியில் கேட்ட நேயர்கள் இன்று புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கேட்டாலும் பழமையை மறக்கவில்லை என்றே கூறவேண்டும். இங்கிலாந்து மக்களின் வரிப் பணத்தில் செயல்பட்டு வரும் பிபிசி தமிழோசை விரைவில் தனது 75 ஆண்டுகளைத் தொடவுள்ளது.
இன்று பத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வானொலிகள் சிற்றலையில் ஒலிபரப்பி வந்தாலும், செய்தி சாம்ராஜ்யத்தின் மன்னனாக இன்றும், என்றும் பிபிசி இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *