யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வருடம் தோறும் வழங்கும் யாழ்.விருது இந்த ஆண்டு நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கு வழங்கப்படுகின்றது.
சைவ சமய விவகாரக் குழுவின் மகா சபை நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையின் ஆணையாளரும் குழுவின் தலைவருமான செ.பிரணவநாதன் தலைமையில் கூடியபோது இம் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது.
சுமார் 70 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபையானது வருடம் தோறும் இலட்சக் கணக்கான அடியார்களுக்கு அமுதளிக்கும் அரிய பணியை சிறப்பாகச் செய்து வருகின்றது.
நயினாதீவு மஹோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்கும் பணியை கூட்டு முயற்சியாகப் பல பெரியார்கள் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
இப் பணியைக் கௌரவிக்கும் வகையில் யாழ்.விருது அமுதசுரபி அன்னதான சபைக்கு வழங்கப்படுகின்றது.